வாஷிங்டன்
மக்களிடையே நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் வருமான வரி விகிதத்தைக் குறைப்பது குறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
வரும் 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் இரண்டாம் முறையாக டிரம்ப் போட்டியிட உள்ளார். கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை குறித்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த இரு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் மந்த நிலையை அடையுமெனக் கூறப்படுகிறது. அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் இது தேர்தலைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த வருடம் 2% ஆக உள்ள பொருளாதார மந்த நிலை 2020 ல் 38% ஆகவும் 2021ல் 34% ஆகவும் மாற வாய்ப்பு உள்ளதாக வர்த்தக பொருளாதார தேசிய சஙம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக அதிகாரிகள் மக்களிடையே பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2008 ல் இவ்வாறான நிலை ஏற்பட்ட போது அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2011 மற்றும் 2012 ஆம் வருடம் வருமான வரி ரத்து செய்யப்பட்டது.
தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் வருமான வரிக் குறைத்து புதிய விகிதங்கள் அறிவிப்பது அல்லது வரி ரத்து செய்வது ஆகியவற்றைப் பரிசீலித்து வருகின்றனர். இவ்வாறு வரி ரத்து செய்ய்படும் நிலையில் மக்களின் வருமானத்தில் குறைவு உண்டாகாது எனவும் அது மக்களின் பொருளாதார மந்த நிலையைச் சரிக்கட்டும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கை இன்னும் ஆலோசனை வடிவில் உள்ளது. அதிபர் டிரம்ப் இது குறித்து முடிவெடுத்த பிறகு பாராளுமன்ற ஒப்புதல் பெற்றால் மட்டுமே அமுல் படுத்த முடியும்.