ஓய்வூதியத் திட்டங்களில் கிரிப்டோ முதலீடுகளை அனுமதிக்கும் டிரம்பின் நிர்வாக உத்தரவு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை (Securities and Exchange Commission – SEC) ஆணையத் தலைவர் பால் அட்கின்ஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆகஸ்ட் மாத நிர்வாக உத்தரவு, 401(k) ஓய்வு திட்டங்களில் கிரிப்டோ கரன்சியை முதலீட்டாளர்களுக்கான மாற்று சொத்தாக மாற்றுமாறு SEC-க்கு அறிவுறுத்தியது.

முன்னதாக, கிரிப்டோவுக்கு எதிரான தொழிலாளர் துறையின் வழிகாட்டுதல்கள் கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவால், 90 மில்லியன் அமெரிக்கர்கள் சிறந்த ஓய்வுப் பலனைப் பெறுவார்கள் என்று SEC-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 9 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், $9.3 டிரில்லியன் மதிப்புள்ள 401(k) சந்தைக்கு கிரிப்டோ திறக்கப்படும். 1% ஒதுக்கீடு கூட $93 பில்லியன் அளவுக்கு கிரிப்டோ முதலீட்டை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மிச்சிகன் மாநில ஓய்வூதிய நிதி, Bitcoin ETF மற்றும் Ethereum Trust போன்ற சில பொது ஓய்வூதிய நிதிகள் ஏற்கனவே கிரிப்டோ பங்குகளை வாங்கியுள்ளது.

அதேவேளையில், கிரிப்டோ ETFகளில் முதலீடு செய்த முதல் பொது ஓய்வூதிய நிதிகளில் ஒன்றான, விஸ்கான்சின் மாநில முதலீட்டு வாரியம் வைத்திருந்த Bitcoin ETF பங்குகளை விற்றுவிட்டது.