அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிகில் குப்தாவை அமெரிக்கா கொண்டு வருவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க மற்றும் கனடா ஆகிய இருநாட்டு குடியுரிமை பெற்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தீர்த்துக் கட்ட நிகில் குப்தா திட்டம் தீட்டியதாகவும் அதற்கு இந்திய அதிகாரிகள் தூண்டுதலாக இருந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய அதிகாரிகள் தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தது பற்றி குறிப்பிட்டுள்ள அமெரிக்க உளவுத்துறையினர் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான தகவலை நிகில் குப்தாவுடன் இந்திய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள சீக்கிய அமைப்பின் தலைவர் பெயர் குறித்த விவரங்களை அமெரிக்க உளவுத்துறையினர் வெளியிடவில்லை என்ற போதும் சமீபத்தில் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் அது குருபத்வந் சிங் பன்னு என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குருபத்வந் சிங் பன்னுவை கொல்ல கூலிப்படையினரை தொடர்புகொள்ள நிகில் குப்தா முயற்சிமேற்கொண்டதாகவும் கூலிப்படையைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த நபரிடமே அதற்காக பணம் கொடுத்ததாக ஆதாரத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கறிஞரான பன்னுவிடம் வழக்கு தொடர்பாக தொடர்பு கொண்டு அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்க நிகில் குப்தா திட்டம்தீட்டியதாகவும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் அவரை அந்த இடத்தில் கொலை செய்ய யோசனை வழங்கியதாகவும் நிகில் குப்தா மீது அமெரிக்க உளவுத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த சதி திட்டத்தில் இந்திய அதிகாரிகளின் தூண்டுதல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரை அமெரிக்க மண்ணில் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தொடரப்பட்டுள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நிகில் குப்தா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு