எப்போதுமே அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது, அந்நாட்டில் பணிபுரியும் தொழில்நுட்பவாதிகள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனெனில், ஓவல் அலுவலகத்தில் அமரும் ஆட்கள், இந்த இந்தியர்களின் தொழில்சார்ந்த தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள்.

பதவிக்கு வந்து ஒருசில வாரங்களே கடந்துள்ள நிலையில், ஜோ பைடனின் தற்போது வரையிலான நடவடிக்கைகள், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாகவே உள்ளன. டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்து விடுதலையை அளிப்பதாக உள்ளது பைடனின் அறிவிப்புகள்.

ஆனால், அதற்காக எதிலும் முழு முடிவிற்கு வந்துவிடும் சூழல் இப்போது இல்லை. ஜோ பைடனின் சில கொள்கைகள் நடைமுறைக்கு வந்தால் அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் நெருக்கடியை சந்திக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைடன் பதவியேற்ற ஜனவரி 20ம் தேதி, புதிய குடியேற்ற மசோதாவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் கிரீன்கார்டு பெறுவதில் சிக்கலை சந்தித்த 8 லட்சம் இந்தியர்கள் பயன்பெற்றனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 85000 புதிய எச்-1பி விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ஐடி துறைகளில் பணியாற்றுபவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாக்களில் பிரச்சினைகள் எழுந்த காரணத்தால், பல அமெரிக்க நிறுவனங்கள் உள்ளூர் ஆட்களையே பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, புதிய அரசின் சில கொள்கைகள் நடைமுறைக்கு வருகையில், அதன்மூலம் அவுட்சோர்ஸிங் தொழில்துறையில் பாதிப்புகள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.