அமெரிக்காவின் பிரபல பி&பி தியேட்டர்களில் 2 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி, தெலுங்கு தவிர தமிழ் படங்களுக்கும் சமீபகாலமாக அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அங்கு ஒடும் இந்திய படங்களை பார்ப்பதற்காக இந்தியர்கள் மட்டுமன்றி பிற ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

இந்த நிலையில், தியேட்டர் டிக்கெட் வாங்குவதற்கு கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி வரும் புகார்கள் அதிகரிக்கத் துவங்கியது.

இதுதொடர்பாக தனியார் புலனாய்வு நிறுவனத்தை நாடிய பி & பி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை அம்பலமாகி இருக்கிறது.

தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் புக் செய்த நபர்கள் படம் பார்த்த மறுநாள் தாங்கள் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை என்றும் தங்கள் கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் வங்கிகளுக்கு புகார் அளித்துனர்.

சராசரியாக டிக்கெட் ஒன்றுக்கு தாங்கள் செலவிட்ட 15 முதல் 20 டாலரை ஒவ்வொருவரும் திரும்பப்பெற்றுள்ளனர். இதில் குழுவாக 7 – 8 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ஓவர்லாண்ட் பார்க் மற்றும் மோர்ஸ்வில்லே ஆகிய இடங்களில் முறையே $150,000 மற்றும் $ 100,000 மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஐ.பி. எண்கள், வீட்டு முகவரி உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மற்றும் தியேட்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் என அனைத்தையும் ஆய்வு செய்த புலனாய்வு நிறுவனம், இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டதை உறுதிசெய்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க போலீசாருக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்பதுடன் நாட்டை விட்டும் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.