அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுவந்த வரியை 10 முதல் 50 சதம் வரை உயர்த்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.
இதில், பிரிட்டனுக்கு 10 சதவீதமும், இந்தியாவுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும் அதிகபட்சமாக கம்போடியாவுக்கு 49 சதவீதமும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் தவிர அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ளாத நாடுகளும் அதிக வரி விதிக்கிறது.
அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், பரஸ்பர வரி விதிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்டார்.
ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய வரி உயர்வால் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பல நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகள் இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று கவலை தெரிவித்தார்.
“அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும், குறிப்பாக ஆட்டோமொபைல், தொழில்துறை, மருந்துத் தயாரிப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகள் இதனால் பாதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.