வாஷிங்டன்:

சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிரியாவில் அமெரிக்கா ரஷ்யா இடையே போர்  மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்க, சிரியா மீது தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளளார். அதைத் தொடர்ந்து தாக்குதல்கள் தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.  இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் கடந்த வாரம் அரசு படையினர் நடத்திய கொடூர ரசாயண தாக்குதலில் குழந்தைகள் உள்பட ஏராள மானோர் பலியாகினர்.  சிரியாவின்  டோமா பகுதியில், சிரிய அரசு நடத்திய ரசாயன தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும், சுமார் 700 பேர் வரை  காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த ரசாயன தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இது மிக கொடூரத் தாக்குதல். இந்த தாக்குதலுக்கு மனித மிருகமான சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் ரஷ்யா அதிபர் பொறுப்பேற்க வேண் டும். ரசாயனத் தாக்குதல் நடத்தியதற்கு பெரும் விளைவுகளை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தி ருந்தார். அதைத்தொடர்ந்து, தனது போர்க்கப்பல்  ஒன்றையும்  சிரிய கடற்கரைப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியிருந்தது.   இது பிரச்சினையை மேலும் வலுவாக்கியது.

இதற்கு பதில் அளித்த ரஷ்யா, சிரியாவுக்கு ஆதரவாக களமிறியங்கியது.  அமெரிக்கா ஏதேனும் ஏவுகணைகளை ஏவினால், அதனை சுட்டு வீழ்த்துவோம். சிரியாவை காப்பது தங்களுக்கு உரிமை என கூறியது.

இதன் காரணமாக சிரியா பிரச்சினை மேலும் பரபரப்பை கூட்டியது. எந்த நேரத்திலும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையில்,  பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதையடுத்து சிரியாவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலுக்கு  சிரியாவின்  டமாஸ்கஸ் பகுதியில் உள்ள  ஒரு அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.