ஹூஸ்டன்
அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் சீக்கியரான சந்தீப் சிங் டாலிவால் காவல் துறையில் பணி புரிந்து வந்தார். அமெரிக்கக் காவல்துறையின் முதல் சீக்கியரான அவர் தலைப்பாகைக்குப் பதில் காவல்துறை தொப்பியை அணிய மாட்டேன் எனப் போராடி அதில் வெற்றி கண்டார். இவர் ஹாரிஸ் கவுண்டியின் துணை ஷெரிப்பாக பணி ஆற்றி வந்தார்.
சுமார் 10 வருடங்களாக நீல நிற தலைப்பாகை அணிந்து பணி புரிந்து வந்த டாலிவால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரு பிரபல ரவுடியை பிடிக்க காரில் துரத்திச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரவுடியின் ஆட்களால் டாலிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அமெரிக்க வாழ் இந்தியச் சமுதாயத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
நேற்று ஹூஸ்டன் நகரில் நடந்த அவரது இறுதிச் சடங்குக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வந்திருந்தனர். சிக்கிய முறைப்படி நேற்று மாலை 4 மணிக்கு அவருடைய இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவருடைய உடல் ஹூஸ்டன் நகரில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.