டில்லி
சட்டவிரோதமாகக் குடி புகுந்த 145 இந்தியர்கள் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்க நாட்டில் குடிபுகுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு குடிபுகுவோரை அமெரிக்க அரசு பிடித்து நாடு கடத்தி அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச ஏஜண்டுகள் மூலம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக அனுப்பப்படுகின்றனர்.
இவர்களில் பல இந்தியர்களும் உள்ளனர். அவர்களில் 145 பேரை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பி உள்ளது. இவர்கள் இன்று காலை டில்லி விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். வங்க தேசம் வழியாக வந்த இந்த விமானத்தில் வங்க தேசத்தை சேர்ந்தவர்களும் வேறு சில தெற்காசிய நாட்டினரும் இருந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர், ”இந்த விமானத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிலரும் இருப்பதாக ஏற்கனவே எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அமெரிக்காவுக்குத் திரும்பச் செல்ல முடியாத ஆவணங்கள் அளிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று 117 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குப் பெரும்பாலானோர் மெக்சிகோ மூலமாக செல்வதால் அங்கு சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திரும்ப அனுப்ப அமெரிக்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கடந்த மாதம் 18 ஆம் தேதி மெக்சிகோவில் இருந்து 311 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.