உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து மேலும் பின்வாங்கும் வகையில், அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்புகள் வெறும் லெட்டர் பேட் அமைப்புகள் என்று டிரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ள நிலையில் இதிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 7, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஆகும். குறிப்பாக காலநிலை மாற்றம், தொழிலாளர் நலன், சமூக சமத்துவம் போன்ற விஷயங்களில் செயல்படும் “விழிப்புணர்வு அமைப்புகள்” என்று டிரம்ப் நிர்வாகத்தால் அடையாளப்படுத்த அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-பிரான்ஸ் தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டணியிலிருந்தும் அமெரிக்கா வெளியேறியுள்ளது. இந்த கூட்டணி நவம்பர் 30, 2015 அன்று பாரிஸில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது.
காலநிலை மாற்றம் தொடர்பான UNFCCC ஒப்பந்தத்திலிருந்து விலகியிருப்பதும் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தமே பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் அடித்தளம் ஆகும். டிரம்ப் காலநிலை மாற்றத்தை “பொய்” என தொடர்ந்து கூறி வருகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்த அமைப்புகள் தேவையற்றவை, சரியான நிர்வாகம் இல்லாதவை, பணவீணடிப்பவை மற்றும் அமெரிக்காவின் இறையாண்மை, சுதந்திரம், பொருளாதார நலன்களுக்கு எதிரானவை” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO), பாலஸ்தீன அகதிகளுக்கான UNRWA, UN மனித உரிமைகள் பேரவை, யுனெஸ்கோ (UNESCO) ஆகிய அமைப்புகளுக்கான ஆதரவையும் அமெரிக்கா ஏற்கனவே நிறுத்தியுள்ளது.
“அமெரிக்கா விலகுவது, மற்ற நாடுகளும் காலநிலை நடவடிக்கைகளை தள்ளிப்போட ஒரு காரணமாக அமையும். அமெரிக்காவின் ஒத்துழைப்பு இல்லாமல் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்” என எச்சரித்துள்ளனர்.
மேலும், உலகம் முழுவதும் மகப்பேறு மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்கும் UN மக்கள் தொகை நிறுவனம் மீதும் அமெரிக்கா ஆதரவை நிறுத்தியுள்ளது. இந்த அமைப்பு குறித்து முன்பு எழுந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பைடன் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, பன்னாட்டு பருத்தி ஆலோசனை குழு, சர்வதேச டிம்பர் அமைப்பு, ஐ.நா. பல்கலைக்கழகம், கலாச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா விலக உள்ளது.
வேறு சில அமைப்புகளில் இருந்தும் வெளியேறுவது குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]