வாஷிங்டன்: அமெரிக்காவில் எச் 1பி விசா வைத்துள்ளவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதற்கான உத்தரவை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா எச் 1பி ஆகும். இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிய காலக்கெடு முடிந்தவர்கள் அதை நீட்டிக்கவும், கிரீன் கார்டு பெறவும் மீண்டும் விண்ணப்பிப்பார்கள்.
அப்படி விசா காலக்கெடு நீட்டிப்பு மற்றும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தற்கான காலக்கெடு முடிந்து இருந்தாலும், கொரோனா காரணமாக காலாவதியான தேதியிலிருந்து 60 நாட்கள் வரை காலக்கெடு நீட்டித்து விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் குடியேற்றத் துறையில் எந்த வித சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதற்காக மேற்கண்ட நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து இருக்கிறது.  அமெரிக்க குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்1 பி விசாவில் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் 65,000க்கும் அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகி உள்ளன. 1,069,400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.