டெல்லி:
பணமதிப்பிழப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நிதி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியிருந்தது. இக்குழு தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி முன் ஆஜரான உர்ஜித் படேல் கூறியதாவது:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக ரூ. 9.2 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 500, 1000 செல்லாது என்று என்ற திட்டத்தை மத்திய அரசு தான் முடிவு செய்தது. பணமதிப்பிழப்பு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை தான். ஆனால், நீண்ட கால பயனளிக்கும் இந்த திட்டத்தில் தாக்கம் மறைந்து போகும். பணமதிப்பிழப்பு முடிவு என்பது ரிசர்வ் வங்கியின் விதிகள் மற்றும் பணவியல் கொள்கைக்கு எதிரான முடிவில்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்ட ஜனவரி மாதம் பணமதிப்பிழப்பு குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆலோசனையை தொடங்கியது. ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாத என்று அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. இதன் மூலம் தான் நவம்பர் 7ம் தேதி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது என்று செய்திகள் வெளியாகியிருந்தது.
தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதற்கும், பண பற்றாகுறை மற்றும் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.
புழக்கத்தில் இருந்த 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சில மணி நேரத்தில் மத்திய அரசு அறிவித்தது. ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் 97 சதவீத பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் ஆகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், பணமதிப்பிழக்க அறிவிப்பில், ரிசர்வ் வங்கி தனது தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளது என்றும், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஏ.டி.எம்.களிலும் புதிய ரூபாய் நோட்டுக்களை அடுக்குவதற்கு ஏற்ப மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.