உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்
பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா தேசமாக பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. பத்ரி நாராயணரின் சிலை கிபி 9 ஆம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சுலபம் அல்ல. கடுமையான மலைப் பாதைகளைக் கடந்து தான் செல்ல வேண்டி இருக்கும்.
தீர்த்தங்களின் சிறப்பு
இந்தக் கோவிலில் ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாத தாரா, ரிஷிகங்கர் என்று ஐந்து ஆறுகள் உள்ளன. கூர்ம தாரா எனும் தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டம் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பிறகு தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதியில் ஸ்நானம் செய்வது என்பது ஆபத்தானது. இந்த தப்த குண்டத்தில் இருக்கும் நீர் சுடுதண்ணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு குளிர்ந்த பிரதேசத்தில் இந்த நீர் எப்படி வெண்நீராக மாறுகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் இதற்கான ஒரு புராணக்கதை உண்டு. அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாகச் சேர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் வேண்டுதல் வைத்தார். விஷ்ணு பகவான், அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் அவருடைய பாவமெல்லாம் கறைந்துவிடும் என்றும், அதேபோல் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நாராயணரின் பாதங்களிலிருந்து நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம். சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலக்நந்தா நதியில் நாம் தொட முடியாத அளவிற்குக் குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.
தல வரலாறு
கைலாயத்தில் இருக்கும் சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தது. தன் கணவரான சிவனுக்கும் ஐந்து தலை, பிரம்மனுக்கும் ஐந்து தலை என்ற கேள்வியுடன் சிவபெருமானிடம் விவாதத்தை ஏற்படுத்திய பார்வதி தேவியால் சிறு குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்குப் பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலைக் கையை விட்டு கீழே விழவில்லை. இதற்கான தீர்வினை விஷ்ணுவிடம் கேட்டபோது, ‘பூலோகத்தில் வசிக்கும் பதிவிரதையிடம் பிச்சை எடுத்து, அவள் கையால் அளிக்கும் பிச்சையினை சிவபெருமான் பெற்றால்’, பிரமஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று தீர்வினை கூறினார்.
இதனால் பூலோகம் வந்தடைந்தார் சிவபெருமான். பூலோகத்தில் பத்ரி ஆசிரமத்தில் நாராயணர், தாரக மந்திரத்தை மாணவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையிலிருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர். இதனால் இந்த இடத்தில் பித்துக்களுக்குப் பிண்டம் வைப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் வைத்துக்கொள்ளலாம்.
பலன்கள்
திருமணத்தடை உள்ளவர்கள் பத்ரி நாதரையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடத்தில் முன்னோர்களுக்கு கயா போல பிண்டமிட்டு, அலக்நந்தா என்னும் ஆற்றில் பிண்டத்தைக் கரைத்தால் புண்ணியம் ஏற்படும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
தரிசன நேரம்:
காலை 4.30AM – 12.30PM
மாலை 3.00PM – 9.00PM
முகவரி:
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்,
பத்ரிநாத் தாம்,
சாமோலி மாவட்டம்,
உத்தரகாண்ட் மாநிலம்.