சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள். இதையடுத்து அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
அதே வேளையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரசாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டத்தை கூட்டவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், நேரடி பிரசாரத்துக்கு சென்றால் மக்கள் கூடுவதை தடுப்பது சிரமம் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.