உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில், திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ளது.
காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் ஊரில் 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட ஒரு மிகப் பழமையான சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கல் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். “காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும்” காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.
ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி வாய்ந்தவள். இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்று.
கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.