சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற்று 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளையும் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. இதையடுத்து, உள்ளாட்சி தலைவர் பதவி களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெற்றது. அதன்படி, மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிளுக்கான மறைமுக தேர்தலின்போது பல இடங்களில் குளறுபடிகள் நடைபெற்றன. மேலும் சில இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றிபெற்றதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் திமுக தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுகவினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன்படி, மொத்தம் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்குத்தான் இன்றைய தினம் மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலின்படி, மாநில தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும், மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் என ஒரே நாளில் 2 தேர்தல் நடக்க உள்ளது.
விடுபட்ட 62 பதவிகளுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு