டெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ரூ. 782 கோடி யுபிஐ வாயிலாக பண பரிவா்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) NPCI தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

இன்றைய நவீன நயகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதிலும், பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் முன்னணியில் உள்ளது. இதுமட்டுமின்றி, வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் போன்றவையும் உபயோகத்தில் உள்ளது.  தற்போது கிராமங்கள் வரையில் இச்செயலிகள் பரவியுள்ளன. பெட்டிக்கடை, தெருவோரக் கடைகளில் இச்செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் (QR Code) அட்டையை பார்க்க முடியும்.

தற்போது, ரூ.10 முதல் அதிகபட்சமாக பல லட்சங்கள் வரை, இதுபோன்ற டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ரொக்கப்பணமில்லா கேஸ்லெஸ் பரிவர்த்தனை.  இந்த புதிய நடைமுறை நம் மக்களிடையே அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிதாக்கி உள்ளது. பல வளர்ந்த நாடுகளில் இன்னும் கார்டு மூலமான பரிவர்த்தனையே முதன்மையானதாக இருக்கும் நிலையில், இந்தியா டிஜிட்டல் பண வர்த்தனையில், உலகின் முன்னோடி நாடாக கிழ்கிறது.

இந்தநிலையில்,  கடந்த ஆண்டு, 125.94 டிரில்லியன் மதிப்புள்ள 74 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை UPI செயல்படுத்தியுள்ளது என்று NPCI தரவு காட்டுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டும்,  யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

இதுதொடர்பாக இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறையாக யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது

ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது.  இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது

2021ஆம் ஆண்டு மொத்த பரிவர்த்தனை 3,800 கோடியாகவும், பரிவர்த்தனை தொகை ரூ.72 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாதந்தோறும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.