சென்னை: கட்டப்பட்டு வரும் திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையம் போலே ஏசி, ஃபுட்கோர்ட், எஸ்கலேட்டர், வைஃபை உள்பட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து சென்னை நகரம் மற்றும் புதிதாக அமையவுள்ள  பரந்தூர் விமான நிலையம்  வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியான திருமழிசை அருகே குந்தம்பாக்கத்தில் தமிழகஅரசு சார்பில் புறநகர் பேருந்து நிலையில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து புத்தாக அமைக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் வகையில்  ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.. இது ஏற்கனவே முன்மொழியப்பட்ட பூந்தமல்லி-பரந்தூர் விமான நிலைய மெட்ரோ பாதையின் ஒரு பகுதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி, ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. தற்போது,  மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் விறுவிறுநுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இதில் கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுவரும் 4-வது வழித்தட மெட்ரோ ரெயில் பாதையை, பூந்தமல்லியில் இருந்து புதிதாக விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரை கூடுதலாக 50 கி.மீ. தூரத்துக்கு நீட்டிப்பு செய்ய மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதுபோல சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தை மேலும் 93 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் புதிதாக பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும்.

பூந்தமல்லி-பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதையை எந்த வழியில் அமைப்பது, எங்கெல்லாம் ரெயில் நிலையங்கள் அமைப்பது, எத்தனை குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் அமைப்பது, மெட்ரோ ரெயில் நிறுவனம் செலவிடும் தொகைக்கு ஏற்ப எவ்வளவு வருவாய் கிடைக்கும், தேவைப்படும் நிலம், அரசு, தனியார் நிலங்கள் எவ்வளவு தேவைப்படும் என்பவை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும் பணி நடந்துவருகிறது.

இந்தக் குழு, பூந்தமல்லி-பரந்தூர் விமான நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் வழங்க உள்ளது. அதற்குப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி, நேரம் உள்ளிட்டவை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்,  அதற்குப் பிறகே இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் வரைக்கும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், திருமங்கலம் முதல் ஆவடி வரைக்கும் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக, அந்த பகுதிகளில், மண் பரிசோதனை செய்து முடித்தபிறகு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த அறிவிப்பை முறையாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் அமைச்சர் சேகர்பாபு திருமழிசை குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த பேருந்து நிலையில்,  அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து குந்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை மேலும் நவீனப்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி திருமழிசை குந்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் முழுவதுமாக குளிரூட்டப்பட்டு, வைஃபை வசதியுடன், பயணிகள் குளிரூட்டப்பட்ட வளாகத்தில் ஓய்வெடுக்கும் அறைகளும், மற்றும் தேவைப்பட்டால் தங்கள் மடிக்கணினிகளில் வேலை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும்,  பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் விருப்பமான உணவு மற்றும் பானங்களை அனுபவிக்கும் வகையில் ஃபுட் கோர்ட் அமைக்கப்பட  இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளர்.

இந்த பேருந்து நிலையத்தை,  விமான நிலையம் போல் அமைக்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.  சுமார்  25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திருமழிசை டெர்மினஸ், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற மேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு 70 பேகளும், தனியார் சேவைகளுக்காக 30 பேகளும், எம்டிசி பேருந்துகளுக்கு 36 பேக்களும் இருக்கும். 1,600க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 200 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் ஆலை மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட உஎள்ளது.

அத்துடன் பல பேருந்துகள் பெங்களூரு நோக்கி வருவதால், ஐடி ஊழியர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெறும் என்பதால்,  இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக,  இங்கிருந்து, சென்னை நகரம் மற்றும் விமான நிலையம் செல்வதற்கான  மெட்ரோ ரயில் பாதை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பூந்தமல்லிக்கு மெட்ரோ இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா /Chennai Unified Metropolitan Transport Authority (Cumta)) குழு கடந்த வாரம் டெர்மினஸை பார்வையிட்டது. “எதிர்காலத்தில் பாரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் போது, அது குத்தம்பாக்கம் வழியாக செல்ல வேண்டும். திருவள்ளூரிலிருந்தும் அணுக திட்டமிட்டுள்ளோம்,” என்று கும்டா சிறப்பு அதிகாரி ஐ ஜெயக்குமார் தெரிவித்தார். மெட்ரோ இணைப்பு தடையற்ற பயணத்தை வழங்க உதவும் என்று CMDA அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.