புலந்த் சாகர், உ.பி.
உ.பி. மாநிலத்தில் காவல் துறையினரை பணிபுரிய விடாமல் தொல்லை செய்த 5 பாஜக பிரமுகர்களை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
புலந்த் சாகர் மாவட்டம், சயானா சர்க்கிளில் காவல்துறைப் பெண் அதிகாரியாக பணிபுரிபவர் சிரேஷ்டா தாக்குர். இவர் கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று தன் குழுவினருடன், சாலை பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பிரமோத் குமார் என்னும் ஒருவரை நிறுத்தி ரூ 200 அபராதம் விதித்தார். அந்த நபர் தன்னை பாஜக கட்சியின் பிரமுகர் என அறிமுகம் செய்துக் கொண்டார். அவர் மனைவி அந்த ஊரின் பஞ்சாயத்து கவுன்சிலர் எனவும் கூறினார்.
யாராக இருப்பினும் அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என தாக்குர் கூறிவிட்டார். உடனே பிரமோத் தனது மொபைல் மூலம் பாஜக தலைவர்களுக்கு தகவலை தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தலைவர்கள் போலீஸ் சோதனை செய்தது தவறு என வாதாடினார்கள். நகர பாஜக தலைவர் முகேஷ் பரத்வாஜ் வந்து அவரை விட்டு விடும்படி கூறி இருக்கிறார்
அதிகாரி அம்மையார், முதல்வரிடம் இருந்து இனி பாஜக கட்சியினருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என உத்தரவு வாங்கி வருமாறு கூறி இருக்கிறார். வாக்குவாதம் முற்றிப் போய் பரத்வாஜ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
பரத்வாஜ், கட்சி மேலிடத்துக்கும் அரசுக்கும் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் தாக்குர் உடன் பணி புரியும் ஒரு காவலர், பிரமோத்துக்கு அபராதம் இல்லாமல் செல்ல லஞ்சம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது சிரேஷ்டா தாக்குருக்கு இட மாறுதல் உத்தரவு வந்துள்ளது. பரத்வாஜ் இது தனது புகாரினால் அல்ல என மறுத்துள்ளார். மேலும் தாக்குர் முதல்வரை நடு சாலையில் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதை வேறு யாரோ முதல்வருக்கு தெரிவித்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.