உ.பி: மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயற்சி- பதட்டம்- உச்சகட்ட பாதுகாப்பு

லக்னோ

உத்தரபிரதேசத்தில் மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதை அங்குள்ள பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக புலந்த்சார் மாவட்டத்தில் உள்ள சான்காரி  கிராமத்திலும் பாஜகவினர், பாண்டு வாத்தியம் முழங்க நேற்றுமுன்தினம் இரவு ஊர்வலம் சென்றுள்ளனர். அந்த ஊர்வலம்  அங்குள்ள மசூதி வழியே  போனபோது அதன் கோபுரத்தில் பாஜகவின் கொடியை ஏற்ற அக்கட்சியினர் முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த இஸ்லாமியர்களுக்கும், பாஜக வினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தை அடுத்து மசூதியை சுற்றிலும் போலீஸாரின் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு மதக்கலவரம் ஏற்படாதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


English Summary
UP village tense after bid to hoist BJP flag on mosque