தாஜ்மஹாலைத் தகர்க்க ஐஎஸ் தீவிரவாதிகள் சதியா?

டில்லி-

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாஜ்மஹாலை தகர்க்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்டத்தை  டெலிகிராமில் வெளியிட்டுள்ளது.

அதில் ஆக்ராவில் உள்ள ஒரு நினைவிடத்தை தாக்கப்போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது உறுதியாக தெரிய வருகிறது. இந்த தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது.

ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவன்  தாஜ்மஹாலை பார்த்தபடி நிற்கிறான்.  இந்தப் புகைப்படத்தின் கீழ்ப்பகுதியில் புதிய இலக்கு  என எழுதப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பில் சேர்க்கும் நோக்கில், இந்தியாவில் பிரத்யேக ஐஎஸ் ஆள் சேர்ப்புப் பிரிவை உருவாக்க ஐஎஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கால்பதிக்க முயலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதன் முன்னோட்டமாகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பான ஐபி தெரிவித்துள்ளது

ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவில் தடம்பதிக்க விடாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்கு மிரட்டல் விடுவது இது முதல்முறையல்ல.


English Summary
A pro-Islamic State media group has warned of attacks in India and published a graphic depicting the Taj Mahal as a possible target.