உ.பி. பஞ்சாயத்து தேர்தல் – 3 இந்துத்துவ அரசியல் மையங்களில் தோற்ற பாஜக!

Must read

லக்னோ: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், வாரணாசி, அயோத்யா மற்றும் மதுரா ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில், பெரும் தோல்வியை சந்தித்துள்ளது ஆளும் பாரதீய ஜனதா.

மேற்கண்ட மூன்று மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்துவந்தது யோகி ஆதித்யநாத் கட்சி. ஆனாலும், மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது.

வாரணாசியில், மாவட்டப் பஞ்சாயத்தில், 40 இடங்களில் 8ஐ மட்டுமே வென்றுள்ளது பாஜக. வாரணாசி மற்றும் அயோத்தி பஞ்சாயத்துகளில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது.

மதுராவைப் பொறுத்தவரை, அங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, வெல்லும் நிலையில் உள்ளது.

கோயில் நகரமான வாரணாசி, ராமர் அரசியல் நகரமான அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா ஆகிய மூன்று இடங்கள், பாஜகவின் இந்துத்துவ அரசியல் அஜெண்டாவிற்கான மையப் புள்ளிகளாக திகழ்கின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் என்றால், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சினையையும், வாரணாசியில் கியான்வபி மசூதி பிரச்சினையையும் எழுப்பி வருகிறது பாஜக.

இந்நிலையில், இந்த 3 முக்கியமான மாவட்டங்களிலும், அடுத்த 8 மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோற்றிருப்பது, பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

 

 

 

More articles

Latest article