உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், “உ.பி.யில் பா.ஜ.க. அலை” என்பதாக எழுதி வருகிறார்கள்.
இது உண்மதானா?
இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய விசயத்தைக் கவனிக்க வேண்டும். மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இடங்களில் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்றிப்பது உண்மையே. அதே நேரம், வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் பாஜக படுதோல்வியடைந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதைவைத்துத்தான், “மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்திருக்கிறது” என்று எதிர்க்கட்சிகளின் குற்றம் சாட்டுகின்றன.
இன்னொரு புறம், பா.ஜ.கவை உ.பி. மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதே இத் தேர்தல் மூலம் தெரியவரும் உண்மை.
உள்ளாட்சி தேர்தல் என்பதை மேயர் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் ஒட்டுமொத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும், வாங்கியிருக்கும் வாக்கு சதவிகிதம் மற்றும் வெற்றி பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி என்றால் உ.பி.யில் நடந்திருப்பது என்ன?
அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சி மேயர் பதவிகளை பாஜக பெற்றிருக்கிறது.. அதே நேரம் 16 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 1300 வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கும் 1299 வார்டுகளில் 596 வார்டுகள் மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்திருக்கின்றன.
மீதமுள்ள வார்டுகளில் சமாஜ்வாதி கட்சி 202 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 147 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 110 இடங்களையும் பெற்றிருக்கின்றன. இதர இடங்களில் சுயேச்சைகள் வென்றிருக்கிறார்கள்.
அடுத்து நகராட்சி கணக்குகளுக்கு வருவோம்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 198 நகராட்சிகளில் 70 நகராட்சிகளை மட்டுமே பாஜக பெற்றிருக்கிறது. அதாவது உ.பியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மூன்றில் ஒரு பகுதி.. இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால்.. 35 சதவிகிதம் நகராட்சிகளையே பெற்றிருக்கிறது.
இந்த நகராட்சிகளில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 261 வார்டு உறுப்பினர்களில் 5260 வார்டுகளுக்கான முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இவற்றில் வெறும் 922 வார்டுகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதாவது 18 சதவிகித வார்டுகளை மட்டுமே பாஜக பெற்றிருக்கிறது.
அடுத்து பேரூராட்சிகள் குறித்து பார்ப்போம்.
மொத்தமுள்ள 438 பேரூராட்சிகளில் 100 பேரூராட்சிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதாவது 22 சதவிகித பேரூராட்சிகளை மட்டுமே பாஜகவுக்கு.
மொத்தம் உள்ள 5434 பேரூராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 5433 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் பாஜக 664 இடங்களில் மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. அதாவது 12 சதவிகித இடங்கள் மட்டுமே!
மொத்தத்தில் பெருநகரம் தவிர்த்து ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாஜகவிற்கு பெரும் இழப்புதான். (இந்த பகுதிகளில் வாக்குச்சீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. )
ஆக, வழக்கம்போல, “உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி” என்பது வழக்கமாக ஊதிப்பெருக்கப்படும் “பலூன் செய்திகள்”தான்.
அதில் உண்மை இல்லை.