டில்லி

கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி உபி அரசு சுமார் 3000 மரங்களை வெட்டக்கூடாது என உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக உத்தரப்பிரதேச அரசு ஒரு நெடுஞ்சாலையை அகலமாக்கத் திட்டமிட்டுள்ளது.   இதற்காகச் சாலையை அகலமாக்க வசதியாக 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள 2940 மரங்களை வெட்ட தீர்மானித்து அதற்காக 138.41 கோடி இழப்பீடு அளிக்க முன் வந்தது.

இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே, போபண்ணா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்படுகிறது.   இந்த அமர்விடம் உ பி மாநில அரசின் பொதுப் பணித்துறை தாங்கள் வெட்டும் மரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மரக்கன்றுகளை நட உள்ளதாகத் தெரிவித்தது.

இதற்கு உச்சநீதிமன்ற அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  உச்சநீதிமன்ற அமர்வு, “ஆயிரக்கணக்கான மரங்களைக் கிருஷ்ணரின் பெயரால் வெட்டி சாய்ப்பதை அனுமதிக்க முடியாது.  தற்போது நடப்படும் மரக்கன்றுகள் நிச்சயமாக நூறாண்டுக்கு மேல் உள்ள மரங்களுக்குச் சமம் ஆகாது.  மரங்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆக்சிஜனை வெளிப்படுத்துவதால் அவற்றை யாரும் மதிப்பீடு செய்ய முடியாது.

போக்குவரத்து வேகமாக்க இந்த மரங்களை வெட்ட வேண்டும் என உபி அரசு கூறியதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.   மரங்களை வெட்டினால் போக்குவரத்து வேகம் அதிகரிக்கும் போது அதனால் விபத்துக்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.