லக்னோ
பாஜக ஆளும் உ பி அரசு இந்துக்களின் இலவச புனித யாத்திரையை தடை செய்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் போது இந்துக்கள் இலவசமாக புனித யாத்திரை செல்ல “ஸ்ரவன் யாத்ரா” என்னும் திட்டத்தை அமுல் படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் முதியோர்களின் பயணம் மற்றும் தங்குமிடம், உணவு செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என முந்தைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ள திட்டம் இது. தனது பார்வையிழந்த பெற்றோர்களை காவடி மூலம் தூக்கிச் சென்ற ஸ்ரவண் குமார் பெயரில் இந்த திட்டம் 2015ஆம் வருடம் மார்ச் மாதம் துவங்கப் பெற்றது.
இந்த திட்டத்தின் கீழ் இயக்கப் பட்ட அனைத்து ரெயில்களும் கடந்த அக்டோபர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்திய ரெயில்வேத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் உத்திர பிரதேச மாநில அறநிலையத்துறை இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவிகளை அளிக்காததே என தெரியவருகிறது. இந்தத் துறை சுமார் ரூ. 14 கோடி இதற்காக ஒதுக்கியுள்ள போதிலும் நிதியை அரசு அளிக்கவில்லை என தெரியவருகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தை உ பி மாநில அரசு தடை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.