லக்னோ:  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ்  பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றி  உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்  பகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், அந்த இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக உ.பி. காவல்துறை தகனம் செய்தது சந்தேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ராகுல்காந்தி, பிரியங்காவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்று, பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதற்கிடையில், இறந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை, தடவியல் அறிக்கைகள் அவர் கற்பழிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும்,  அவர்  கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறுகிறது. தற்போது  அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பல முரண்பாடுகள் எழுந்துள்ளதால்,  இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரபிரதேச அரசு அமைத்தது. பின்னர், கடந்த 3-ந்தேதி, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. அதுதொடர்பான கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி, இவ்வழக்கை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் முறைப்படி நேற்று உத்தரபிரதேச அரசு, சி.பி.ஐ.க்கு மாற்றியது. ஆனால், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரோ, சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதி விசாரணை கோருகிறார்கள்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும்  தொடரும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது. இதற்கிடையில்,  இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள், தங்களிடம்  உண்மை கண்டறியும் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.