லக்னோ: பிரதம மந்திரியினுடைய திட்டத்தின்கீழ், தனக்கு வழங்கப்பட்ட ரூ.2000 ஐ, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திருப்பி அனுப்பிய அம்மாநில விவசாயி ஒருவர், தன்னை தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் 39 வயதான உருளைக்கிழங்கு விவசாயி பிரதீப் ஷர்மா. வேளாண்மையில் கடந்த 2016ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டம் குறித்து, அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை.
இவருக்கு ரூ.35 லட்சம் கடன் சுமை உள்ளது. தற்போது, தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்துவரும் இவர், அன்றாட குடும்பத் தேவைகளை நிறைவுசெய்யவே சிரமப்பட்டு வருகிறார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லிக்குச் சென்று, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்திக்க முயன்றும், வெறுங்கையோடுதான் ஊர் திரும்பினார்.
எனவே, தற்போது விரக்தியின் விளிம்பில் இருக்கும் இவர், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட ரூ.2000 ஐ, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
“முதலமைச்சர் தனக்கு உதவ முன்வராவிட்டால், குறைந்தபட்சம், தற்கொலை செய்துகொள்ளவேனும் அனுமதியளிக்க வேண்டும்” என்று தனது உள்ளக் குமுறலை கொட்டியுள்ளார்.
– மதுரை மாயாண்டி