சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிதாக சூட்டப்பட்ட பெயருடன் கூடிய பெயர்பலகையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் தேனாம்பேட்டை மண்டலம் லஸ் சர்ச் சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து தீவிற்கு “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு பெயர்பலகையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கே. பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு இயக்குனர்கள் சங்க பொதுச் செயலாளர் பேரரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.