சென்னை: தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் விஜய கம்லேஷ் தஹில்ரமணியை, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்துள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம்.

நீதிபதிகள் எண்ணிக்கையில் நாட்டிலேயே நான்காவது பெரிய உயர்நீதிமன்றமாக இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரு மூத்த நீதிபதியை, நாட்டிலேயே மிகச் சிறிய உயர்நீதிமன்றமான மேகாலயா (தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தமே 3 நீதிபதிகள்தான் இங்கே) நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்தது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று தொடர்புடைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், ஒரு பெரிய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இத்தகைய ஒரு சிறிய நீதிமன்றத்திற்கு இதுவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதில்லை. எனவே, இதற்கான உண்மையான காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், இந்திய அளவில் 2 பெண் நீதிபதிகள் மட்டுமே உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் விஜயா கம்லேஷ், மற்றொருவர் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(வடகோடி & தென்கோடி பகுதிகள்) கீதா மிட்டல்.