வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) திங்கள்கிழமை அவசரக் கூட்டம் நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் வெனிசுலா விவகாரம் குறித்து நாடுகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு நிலவியது.

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.

“வெனிசுலா விவகாரத்தில் ஐ.நா. சாசன விதிகள் மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்ய பிரதிநிதி, “அமெரிக்காவின் தாக்குதல் தவறானது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சில்லியா ஃப்ளோரஸும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கியூபா, மெக்சிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளும் அமெரிக்க நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன.

சிலி நாடும், இந்த தாக்குதல் சர்வதேச அரசியல் அமைப்புக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று விமர்சித்தது.

“நாட்டின் இயற்கை வளங்களையும், எண்ணெய் வளத்தையும் கைப்பற்றுவதற்காகவே அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது” என்று வெனிசுலா அரசு, ஐ.நா.வில் குற்றம்சாட்டியது.

இதற்கிடையில், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான அர்ஜென்டினா, பிரிட்டன், லாட்வியா ஆகியவை அமெரிக்க நடவடிக்கையை நியாயப்படுத்தின.

அமெரிக்க படைகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடத்திய திடீர் தாக்குதலில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நியூயார்க்குக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

[youtube-feed feed=1]