டில்லி

ரடங்கு தளர்வை ஒட்டி பல பெரிய கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

உலகெங்கும் வாடிக்கையாளர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.   இது இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுவதால் ஊரடங்குக்கு முந்தைய கால கட்டங்களில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.  இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட்டன.   வர்த்தகர்கள், கடைகளில் பணி புரிவோர் என பலதரப்பட்டவர்களும் இதனால் வருமானம் இழந்து தவித்தனர்.  கொரோனா கட்டுக்குள் அடங்காததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுப் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன.   இந்த கடைகளின் வாடிக்கையாளர்களிடம் இந்தியச் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ஒரு கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.   இந்த கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்களில் 73% ஆண்கள் மற்றும் 23% பெண்கள் ஆவார்கள்  இவர்களில் மூன்றில் இரு பங்கு 25 முதல் 45 வயதுடையவர்கள் ஆவார்கள்.

இதில் 80% பேர் மும்பை, பெங்களூரு, சென்னை, டில்லி போன்ற முதல் கட்ட நகரத்தைச் சேர்ந்தவர்கள்  ஆகும்.  இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் முதல் கட்ட நகர மக்கள் 62%  பேர் கடைகள் திறக்கப்பட்டு முதல் மூன்று மாதங்கள் வரை கடைகளுக்குச் செல்லப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.  இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 75% பேர் இதே பதிலைத் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் 78% பேர் தங்கள் வர்த்தக செலவுகளை குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  சுமார் 6% மட்டுமே அதிகரிக்கப் போவதாகக் கூறி உள்ளனர்.

கடைகளின் சுகாதார நிலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என 75%க்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.   குறைந்த அளவில் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை இருக்க வேண்டும் என 57% பேர் தெரிவித்துள்ளனர்.  சுமார் 30% பேர் அதுவும் தேவை இல்லை எனக் கூறி உள்ளனர்.

வாடிக்கையாளர்களின் வர்த்தக பட்டியலில் 52% பேர் உணவு, மளிகை, துணிமணி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.  அழகு சாதன பொருட்களுக்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.   உணவு விடுதிகள், பயணம், ஓய்வு, நகைகள், கடியாரங்கள் போன்றவற்றில் செலவிடப் பலரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

முக்கியமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகர வாடிக்கையாளர்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதிலும் முதல் கட்ட நகர வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்குவதையும் விரும்பி உள்ளனர்.