சென்னை: சென்னையில்  உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு கடுமையா நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், சுமார் ரூ100 கோடிக்கு மேல் பற்றாக்குறை இருப்பதாக கூறிய அதிகாரிகள், தமிழக அரசிடம் ரூ.88 கோடி நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக செனட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின்   கடந்த   சனிக்கிழமை நடைபெற்ற செனட் கூட்டத்தில், பல்கலைக்கழகம் தனது ஆண்டு பட்ஜெட்டை ஒப்புதலுக்காக தாக்கல் செய்தது.  அதில்,  2022-23 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.164 கோடியாகும், இதன் வருவாய் 2021-22ல் ரூ.79 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.92 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளமாக மாநில அரசின் மானியம் ரூ.63 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தக் கணக்கில் பற்றாக்குறை ரூ.8.5 கோடியாக இருக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் காரணமாகவும், மற்றும் வருவாய் மற்றும் மானியங்களில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகவும் இந்த பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது  நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள், ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, ஒருமுறை சிறப்பு மானியமாக ரூ.88 கோடி தேவைப்படுவதாகவும்,  அதை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ரூ85 கோடி முதல் ரூ90 கோடி வரையிலான ஊதியத்தை திருப்பித் தருமாறு சென்னை பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் கேட்டாலும், பல்கலைக்கழகத்திற்கு சுமார் ரூ60 கோடி வரை மட்டுமே கிடைப்பதாகவும், இதனால் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தற்கு வருவாயை அதிகரிக்க, தொலைதூரக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தற்போது வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய படிப்புகள் மற்றும் வேலை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.