மாஸ்கோ :
கொரோனா வைரஸ் பாதித்து தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சுவாச கோளாறை சரி செய்ய தேவைப்படும் வென்டிலேட்டர்களை ரஷ்ய நிறுவனமான அவன்டாவிடமிருந்து கடந்த மாதம் வாங்கியிருந்தது அமெரிக்கா, இந்த வென்டிலேட்டர்களை தற்போது உபயோக படுத்த தடைவிதித்திருக்கிறது.
உலகம் முழுக்க அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பையும் அதனால் அதிகரித்துவரும் மருத்துவ உபகரணங்கள் தேவையையும் சமாளிக்க பல்வேறு நிறுவனங்கள் இரவு பகல் பாராமல் தயாரித்து வருகின்றன.
2019 ம் ஆண்டு 278 வென்டிலேட்டர்கள் மட்டுமே தயாரித்த அவன்டா நிறுவனம் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த ஆண்டு இதுவரையில் 10,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை தயாரித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், உள்நாட்டு தேவைக்காக இந்த நிறுவனத்திடம் இருந்து வென்டிலேட்டர்களை வாங்கியது ரஷ்ய அரசாங்கம்.
இந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கிய வென்டிலேட்டர்களை பயன்படுத்திய மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கடந்த வாரம் தீவிபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர்.
இது குறித்து கருத்துதெரிவித்த ரஷ்ய மக்கள் நல கண்காணிப்பு குழு ‘ரோஸ் டிராவ்னாட்ஸர்’ இந்த தீவிபத்திற்கு அவன்டா நிறுவனம் தயாரித்த தரமற்ற வென்டிலேட்டர்களே காரணம் என்று கூறியது, மேலும், ஒரு நாளைக்கு 10 வென்டிலேட்டர்களே தயாரிக்க தேவையான வசதி உள்ள நிறுவனத்தில், தேவை அதிகரித்ததன் காரணமாக 100 வென்டிலேட்டர்களை தயாரித்ததே இதற்கு காரணம் என்றும் கூறியது.
இந்நிலையில், கடந்த மாதம் நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண ஆளுநர்களின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய நிறுவனமான அவன்டாவிடம் இருந்து வென்டிலேட்டர்களை அமெரிக்கா வாங்கியது.
இந்த வென்டிலேட்டர்களை வாங்கிய அமெரிக்காவிற்கு இதை வாங்கிய பின் தான், இந்த நிறுவனம், அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்ட ரோஸ்டெக்கின் துணை நிறுவனம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அமெரிக்காவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வென்டிலேட்டர்களை பயன்படுத்தாமல் நிறுத்திவைத்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel