டெல்லி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டெல்லி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார். இது குறித்து விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: எனது தந்தை பல நாள்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்றைய தினம் அவரது உடலில் ஏற்பட்ட சில திடீர் மாற்றங்கள் காரணமாக, அவரது இதய அறுவை சிகிச்சை இரவில் நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால், வரும் வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்.
இந்த தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.