டெல்லி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.
மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது/ இதில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்தியஅரசு ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் அகவிலைப்படை உயர்த்தப்படுவதாகவும், இது தீபாவளி போனசாக அமையும் என்று கூறினார்.
இந்த அறிவிப்பு காரணமாக சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றவர், தற்போது வழங்கப்பட்டு வரும் 12 சதவிகிதம் டிஏ, 17சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், இந்த நடவடிக்கைக்கு அரசுக்கு ரூ. 16,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறிய அமைச்சர், “இது தொழிலாள வர்க்கத்திற்கு உற்சாகத்தைத் தரும், மத்திய அரசு பல துறைகளுக்கான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது” என்று ஜவடேகர் கூறினார்.
மேலும், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2019 ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பிறகு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ், நன்மைகள் பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு நவம்பர் 30 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.