புதுடெல்லி: தனியார்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கான முக்கிய தேவைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, முதியோர் இல்லங்களில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை, ஆடியோ-விசுவல் தெரிவிப்புக் குறி மற்றும் சிக்னல் வசதியுடனான மேலேற்றிகள்(Lifts), அவசியமான மருத்துவ வசதிகள் மற்றும் அவசரகால மருத்துவ அறை, அருகிலுள்ள மருத்துவமனையுடன் ஒப்பந்தம், எரிவாயு கசிவதை கண்டுபிடிக்கும் வசதிகள், பிடிப்பானுடன் கூடிய கழுவுமிடம், வெளிப்பக்கமாக திறக்கக்கூடிய கதவுகள், குளியலறைகளில் வழுக்காத வகையிலான தரைக் கற்கள், தனியான நடைபாதைகள், அபாய ஒலி எழுப்புவதற்கான வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்கள், முதியோர் இல்லங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மாநில அரசுகளுக்கும் பகிரப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்கள், வாழ்வின் கடைசி கட்டத்தை சுகமாக நகர்த்த உதவுவதாய் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாய் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த இல்லங்களில் எவ்விதமான வீட்டு உபயோகப் பொருட்கள்(furnitures) இருக்க வேண்டுமென்ற தெளிவான விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் இந்த விதிமுறைகளை தங்களுடைய ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விதிமுறை சட்டங்களில் அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி