சென்னை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
SSA இன் முக்கிய நோக்கம் நாட்டில் UEE ஐ அடைவதாகும். அதன் ஒட்டுமொத்த இலக்குகளில் உலகளாவிய அணுகல் மற்றும் தக்கவைத்தல், கல்வியில் பாலினம் மற்றும் சமூக வகை இடைவெளிகளைக் குறைத்தல் மற்றும் குழந்தைகளின் கற்றல் நிலைகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த நோக்கங்கள் குறிப்பிட்ட தலையீடுகளுடன் பூர்த்தி செய்யப்படுகின்றன, அவை சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் மற்றும் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 மற்றும் அவ்வப்போது வெளியிடப்பட்ட மாதிரி விதிகள் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட இலவச உரிமைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, , 6 முதல் 14 வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை உள்ளது.
இந்த திட்டத்தை மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மூலம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது (SSA) 2000-2001 முதல் செயல்பட்டு வருகிறது. இந்ததிட்டத்திற்கு 60 சதவிகித நிதி மத்தியஅரசால் வழங்கப்பட்ட வருகிறது.
இந்த நிலையில், மத்தியஅரசு நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், நடப்பாண்டு மத்தியஅரசு எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
2024-25 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை தமிழ்நாட்டில், செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். ஆனால், அதற்கான நிதியை வழங்க மறுத்து வருகிறது. இந்த நிதியின் ஒரு பகுதியான ரூ.573 கோடியை, கடந்த ஜூன் மாதமே மத்தியஅரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்க வில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை எனறு கூறப்படுகிறது.
மத்திய அரசு நிதியை விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியில் எஸ்.எஸ்.ஏ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இலவசங்களை வாரியிறைத்து மக்களை கவர்ந்து வரும் தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மார்ச் 31, 2025 நிலுவையில் உள்ள கடன் ரூ. 8,33,361.80 கோடியாக இருக்கும் என கடந்த மார்ச் வரையிலான ஆடிட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டான 2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு மேலும், ரூ. 1,55,584.48 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.