திருச்சி: புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி தருவதாக மத்தியஅரசு கூறி வருகிறது. தமிழ்நாடுஅரசு கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் சிக்கி உள்ளது. அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம், அதுபோல இதையும் சமாளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக பிரமுகர், அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை வரவேண்டிய 573 கோடி ரூபாய் தற்போது வரை வராமல் உள்ளது.
இது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்கள்.
கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்திவிடக் கூடாது. பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம், இதில் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் உள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதி இருக்கிறோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிகள் வலியுறுத்தினர். கூட்டத்தொடர் முடிந்து தற்போது நீண்ட நாள்கள் ஆகியும் நிதி வராமல் இருப்பது தொடர்பாக நேற்று வெளிநாடு செல்வதற்கு முன்பாககூட மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
ரூ. 573 கோடி மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வரவேண்டிய ரூ. 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், புதிய கல்வி கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நிச்சயம், உண்மைதான்” என்று பதிலளித்தார்.
“பள்ளிக்கல்வித் துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்தது, அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல. ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது,
கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்றுதான் கல்விக்கான நிதி சுமையும் சமாளிக்க போகிறோம்” என்றார். மேலும், கடுமையான நிதி சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தும் முதல்வர் செய்வார்
.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.