டெல்லி: கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கட்டணமில்லாமல் புதுப்பிக்க செப்-14, கடைசி நாளாகும்.
ஏற்கனவே அறிவித்தபடி கடைசி நாள் ஜூன் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலக்கெடு செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. ஆவணம் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக எந்தவொரு கட்டணமும் இல்லாமல் தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் என்பது பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தகவல்களின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். ஆதார் ஒரு நபரின் கண்விழி, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், போலி மற்றும் பொய் அடையாளங்களைக் கண்டறிவதன் மூலமும் குடியிருப்பாளர்களிடையே நகல் எண்களைத் தடுக்கிறது. மக்களின் முக்கியமான அடையாளச் சான்றாக ஆதார் திகழ்ந்து வருகிறது. எந்தவொரு குடியிருப்பாளருக்கும் நகல் எண் இருக்கக்கூடாது, ஏனெனில் இது அவர்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, மோசடி மற்றும் பொய் அடையாளங்களை அடையாளம் காணும்.
ஒவ்வொருவரின் அடையாளமாக செயல்படும் ஆதாரில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், வீடு மாறுபவர்கள், வயது உயர்வு காரணமாக முகஅமைப்பு மாறுதல் போன்ற காரணங்களால், முகவரிச் சான்றையும் பதிவு செய்ய இந்திய ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டை தேவைப்படும் அலுவலகங்கள் மற்றும் விண்ணப்பங்களில், பழைய புகைப்படம் அல்லது பழைய முகவரி காரணமாக ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க இந்தத் தரவுகளை புதுப்பிக்கப் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது பல்வேறு அரசு சேவைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு அவசியமாகும். இந்த 12 இலக்க ஆதார் எண், பல சேவை இணையதளங்களில் அடையாளச் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு விதிமுறைகள், 2016-இன் படி, தனிநபர்கள் தாம் ஆதார் பதிவு செய்த தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் தங்கள் அடையாளச் சான்று மற்றும் பி.ஓ.ஐ ஆவணங்களை (Proof of Identity – PoI Document) புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஐந்து மற்றும் 15 வயதில் நீல ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.