டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த 10ந்தேதி (ஜுன்) கூடியது. அப்போது பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்தது. இதையடுத்து  மத்திய அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் பொறுப்பேற்றனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவதுமுறையாக இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் காலை 10.30 மணி அளவில், பிரதமரின் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடைபெற உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் மாலை 5 மணிக்கு மோடியின் இல்லத்தில் சந்திப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில்,  கேபினட் அமைச்சர்களான  ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் ஜெய்ராம் கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியம் ஜெய்சங்கர், மனோகர் லால், எச்டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான்,  ஜிதன் ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லலன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, பிரலாத் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், அஷ்வினி வைஷ்னா, ஜோதிராதித்யா எம். சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரேன் ரிஜுனா தேவி, கிரன் ரிஜுனா தேவி , ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, ஜி கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான் மற்றும் சி ஆர் பாட்டீல் உள்பட அனைத்து அமைச்சர்களும்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பட்ஜெட், விவசாயிகளின் நலன், அக்னிபாத் திட்டம் உள்பட பல்வேறு அரசு துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.