டெல்லி : தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த மத்தியஅரசு அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என கூறிய திமுக தேர்தல் அறிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 72 ஆக உள்ளது. இதை 90 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 72 சுங்கச் சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 26,000 கோடியை சுங்கக் கட்டணமாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 18 சுங்கச்சாவடிகளை அதிகரிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கிமீ நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன் புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையில், சுங்கச் சாவடிகள் முழுவதும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, ரூ. 500க்கு சிலிண்டர், ரூ.75க்கு பெட்ரோல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும். அதே போல், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்பட்டு, மக்களவைத் தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நிலையே தொடர ஆவணம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்தியஅரசு தற்போது மேலும் சுங்கச்சாவடிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.