சென்னை: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு, தமிழ்நாடு தவிர ஆந்திரா உள்பட  5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுத்து வரும் மத்திய பாஜக அரசு, தேசிய பேரிடர் நிவாரண நிதிகளை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டி வருகிறது.  தற்போது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1554 கோடி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு கொஞ்சம்கூட நிதி ஒதுக்காதது, மத்திய அரசின் மமதையை காட்டுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் ரூ.6,675 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை .

ஆனால்,  புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, நாகலாந்து, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தஆண்டு இறுதியில் விசிய பெஞ்சல்  புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதுதொர்பாக,   தமிழ்நாட்டில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வருகை தந்த மத்திய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குநர் ஆர்.சரவணன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாகவும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு அறிவித்து விட்டு, புயல் பாதிப்புக்கு எந்தவொரு நிதியும் வழங்காமல் துரோகம் இழைந்தது.

இந்த நிலையில், தற்போது, புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, நாகலாந்து, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக,   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள  பதிவில், “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி தலைமையிலான அரசு உறுதி யோடு துணை நிற்கிறது. இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை நிதி உதவியின் கீழ் ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.18,332.80 கோடி முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என கூறியுள்ளார்.