சென்னை: மதுரை மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  ‘டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமைய உள்ள டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை கண்டித்து திமுக உள்பட கூட்டணிகட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில்,  முதலமைச்சர் ஸ்டாலினும் மத்தியஅரசுக்கு எதிராக கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் இன்று கூடியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும்,  மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்  மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம்  போன் மூலம் பேசிய இருப்பதாகவும், அதை  பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாகவும்,   மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்’ என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க., அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக,மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அவர் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து தி.மு.க.,அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.