டெல்லி: தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா உரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதிய நிலையில்,அவரத கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்திற்கு தேவையான உரம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, தி.மு.க., மூத்த எம்.பி.,யான டி.ஆர்.பாலு மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வழங்கினார். அந்த கடிதத்தில், தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி அமோகமாக உள்ளது. மேலும், முக்கிய அணைகள் திறந்து விடப்பட்டதால் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், சம்பா பயிர் சாகுபடிக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. எனவே, நடப்பு ஆண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த உரத் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், தமிழகத்திற்கான உரத்தைக் குறைத்தாலோ அல்லது கூடுதலாக வழங்கத் தவறினாலோ, விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, தாமதமின்றி உரிய நேரத்திற்குள் தமிழகத்துக்கு உரத்தை வழங்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஒதுக்கீட்டைக் காட்டிலும், கூடுதலாக உரங்கள் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்துக்கு விரைவில் வர உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காரைக்காலில் இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10,000 மெட்ரிக் டன், எம்எப்எல் நிறுவனம் 8,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.