டில்லி:

சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

இதில் சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட திருத்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.