டெல்லி: தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,  மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது, இது தென்தமிழகத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை உலகத்தோடு இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என புகழாரம் சூட்டப்படுகிறது.

தென்தமிழக மக்களின் பல ஆண்டுகால கனவு நனவாகும் வகையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (மார்ச் 10) முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் மதுரை விமான நிலையம் இனி உலக நாடுகளுடன் நேரடியாக இணையும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதற்காக விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதுடன், நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையமும் அமைக்கப்பட உள்ளது. இதனால் துபாய், கொழும்பு போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கு மதுரையிலிருந்து நேரடி விமான சேவைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி யுள்ளன.

பழைமையான நகரமான மதுரை, தூங்கா நகரம் என்றும் கோயில் நகரம் என்றும் போற்றப்படுகிறது. இந்த சர்வதேச அங்கீகாரம் மதுரையின் ஆன்மீகச் சுற்றுலாவுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக, மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட், ஆட்டோமொபைல் போன்ற தொழில்துறை வணிகத்தை மேம்படுத்தவும், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்த முடிவு வழிவகை செய்யும்.

[youtube-feed feed=1]