சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான பாமக அதிருப்தி தெரிவித்து உள்ளது. அதே வேளையில் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார்.

பாமக நிறுவனம் ராமதாஸ்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. பூமியில் மண் போல.. புதன் கோள் முழுக்க வைரங்கள்.. வியந்து போன விஞ்ஞானிகள்! வெட்டி எடுக்க முடியுமா? அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023&24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும், அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும். நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது, பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

ஓபிஎஸ்

“இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட்” என முன்னாள்  முதவ்லர் ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்., “மத்திய பட்ஜெட், நல்ல பட்ஜெட். மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட், இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது.

இந்த பட்ஜெட் மூலம் அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கை 5 ஆண்டுகளில் அடைவோம். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட், நல்ல பட்ஜெட் எனக் கூறி வரவேற்றதோடு அவர்களுக்கு எனது வாழ்த்து என தெரிவித்தார்.

மேலும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எந்தவித காரணங்களும் கிடையாது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 11,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு அரசு கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை என கேட்டபோது, பாதிப்புகளுக்கு உண்டான அரசாணையின் படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என ஓபிஎஸ் பதில் அளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றம். மேலும் படிக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை. பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குறியது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது. எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிக்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரெயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எனவே “ஒரு கண்ணில் வெண்ணையும்”, “ஒரு கண்ணில் சுண்ணாம்பும்” வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளாா். 7-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மொராா்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளாா்.

2047 இல் உலகின் முதன்மை பொருளாதார நாடாக இந்தியாவை உயா்த்த பணியாற்றி வரும் பிரதமா் மோடியின் இலக்கை அடையும் நோக்கில் தொலைநோக்குப் பாா்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும்.

4 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, வேளாண் துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு உயா் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில்வதற்கு ரூ.10 லட்சம் கல்விக் கடன், முத்ரா கடன் வரம்பு ரூ. 20 லட்சமாக உயா்வு, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள், ஊரகப் பகுதிகள் சாா்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

மேலும், அரசு-தனியாா் பங்களிப்பில் தொழிலாளா்களுக்கான தங்குமிடங்கள், நாட்டிலுள்ள 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞா்களுக்கு உதவித் தொகையுடன்கூடிய இன்டா்ன்ஷிப் பயிற்சி, புற்றுநோய்க்கான 3 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு ஆகியவையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 15 ஆயிரம் கோடியும், பிகாா் மாநிலத்துக்கு ரூ. 25 ஆயிரம் கோடியும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தனக்கு உதவியவா்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாா். இதன்மூலம் நாட்டின் பிரதமரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை அவா் நிரூபித்துள்ளாா். மத்திய நிதி அமைச்சருக்கு சாமானிய மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் விலைவாசி தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் பேரவைத் தோ்தலை நினைத்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது. அதன் காரணமாகத்தான் அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதுபோல மக்களை அவா் ஏமாற்றுகிறாா். அந்தத் திட்டன் மீது அவருக்கு உண்மையிலேயே ஈடுபாடு இருந்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அதைச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து விமா்சனம் எழுவதால் இப்போது அம்மா உணவகத்தை ஆய்வு செய்கிறாா். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது; 200 நாள்களில் 595 கொலைகள் நிகழ்ந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உணவுப் பொருளான ‘நிப்பட்’ தயாரிக்கும் தொழில் செய்பவா்களிடம் மாதம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்குகிறாா்கள். லாட்டரிச் சீட்டு விற்பனை செய்ய நேரடியாக லஞ்சம் பெறுகின்றனா் என்றாா்.

அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை இலக்காக நிர்ணயித்திருப்பதோடு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கான கட்டமைப்புகள், தோட்டக்கலைகளில் 109 வகையிலான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு முக்கியத்துவம் என வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் புதிய முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் வரை கல்விக்கடன், நாடு முழுவதும் நான்கு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் ஐடிஐகள் (ITI), உற்பத்தி துறையில் முதன்முறை பணியில் சேருவோருக்கு சிறப்பு நிதி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

நியாய விலைக்கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM-GKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள், பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் என பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு ‘2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்’ என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து ‘வரிகொடா’ இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு. ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும் என்று கூறியுள்ளார்.