சென்னை; ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்ப்பதாகவும், இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்று மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில், திருவள்ளூரில் வீர வணக்கநாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இன்று தமிழ்நாடு பகுத்தறிவு கருத்துகளால் உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை நினைவுகூறும் நாள் என்று கூறினார். இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக பாஜக கொண்டுள்ளதாகவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது என மேற்கோள்காட்டிவர், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.
நேருவின் வாக்குறுதியின்படி இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என கூறியவர், தாம் எந்த மொழிகளுக்கும் எதிரி அல்ல எனவும் தெரிவித்தார்.
ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்திய ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை விலையென கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிற நாள் இந்த நாள். இருமொழிக் கொள்கைகளுக்கு காரணமான மொழிப்போர் தியாகிகளை 50 ஆண்டுகள் கடந்தும் நினைவுகூர்கிறோம். தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு இந்தியை திணிக்க நினைத்தால் அதனை தாம் ஏற்க மாட்டோம், திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும், தேர்தல் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சி கடந்த 20 மாதங்களில் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்த சாதனைகள் மகத்தானவை என சூளுரைத்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டதாக சாடியவர், தமிழ்நாடு வாழ்க, தமிழில் வணக்கம் சொல்வதன் மூலமாகவும், திருக்குறளையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாகவும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்க கூடாது.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும். தமிழை காக்கும் முயற்சிகளும் தொடரும். இந்தியை திணித்து ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பார்க்கிறார்கள். தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இறுதியாக தமிழ்நாடு வாழ்க என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.