கொல்கத்தா: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்  என்று மத்திய சட்டஅமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தெரிவித்து உள்ளர்.

மத்திய பாஜக அரசு ஏற்கனவே, பொது சிவில் சட்டம்,  ஒரேநாடு ஒரே தேர்தல், சிஏஏ  உள்பட பல்வேறு சட்டங்களை அமல்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, ஏற்கனவே சிஏஏ உள்பட பல சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது

இந்த நிலையில்,  கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மத்திய சட்டத்துறை அமைச்சர்,  அர்ஜூன் ராம்மேக்வால்,  “பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த சட்டத்தை ஏற்கனவே கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளன. அதைத் தொடர்ந்து விரைவில்,  நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.  தற்போது மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது. அதனால்,  எது குறித்தும்  கவலைப்பட ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து விமர்சித்த மத்திய சட்ட மந்திரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்ப வங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிவுக்குப் பிறகும் வன்முறை நிகழக்கூடாது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றுகிறது’ என்றார். வன்முறை சம்பவங்களை கவனத்தில் கொண்ட கொல்கத்தா ஐகோர்ட்டு, தேர்தலுக்காக மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்பு பணியை வருகிற 21-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது.

இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வன்முறைகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்தது குறிப்பிடத்தக்கது.

பொது சிவில் சட்டம்  தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல. எனினும் இது போன்ற எந்த நடவடிக்கையும் கருத்தொற்றுமை மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என விரும்பு கிறோம்.