சென்னை
பிரதமர் மோடி அறிவித்துள்ள 15 வருடத்துக்கு மேலான வாகனங்கள் உடைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகா , கேரளா மற்றும் தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன.
இந்தியாவில் ஏராளமான பழைய வாகனங்கள் புழக்கத்தில் உள்ளதால் மாசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. தவிர இந்த வாகனங்கள் அதிக அளவில் எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எனவே இதற்காகப் பிரதமர் மோடி 15 வருடத்துக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை உடைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு உடைக்கப்பட்ட வாகனங்களில் உள்ள இரும்பு மீண்டும் வாகன உற்பத்திக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி பழைய வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியச் சாலைகளில் சுமார் 4 கோடி வாகனங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இதில் கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழகத்தில் மட்டும் 138 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன. இதில் கர்நாடகாவில் 70 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் கேரளாவில் சுமார் 34.64 லட்சம் வாகனங்களும் தமிழகத்தில் 33.43 லட்சம் வாகனங்களும் உள்ளன..
இவை மத்திய அரசின் வாகன விவரங்கள் தரவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த தரவு இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. விரைவில் இந்த தகவல்கள் தரவேற்றப்பட்டால் தென் இந்தியாவில் அதிக அளவில் 15 வருடத்துக்கு மேலான பழைய வாகனங்கள் உள்ளது தெளிவாகும்.
இந்த வாகனங்களின் எஞ்சின் திறன், பிரேக் சோதனை, உள்ளிட்டவை நடத்தப்பட்டு இந்த வாகனங்கள் தகுதியானவையா இல்லையா என கண்டறியப்பட உள்ளது. தற்போதைய சட்டத்தின்படி 15 வருடத்துக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு மீண்டும் உரிமம் பெற வேண்டும். அப்போது இந்த சோதனைகள் நடத்தப்பட்டுச் சோதனையில் தோல்வி அடையும் வாகனங்கள் உடைப்பதற்கு அனுப்ப உள்ளன.
இந்த புதிய நடைமுறை வரும் 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.